×

மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் சர்ச்சை பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுப்பதாக ஒலிம்பியன் பஜ்ரங் பூனியா அறிவிப்பு: பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்

புதுடெல்லி: மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ்பூஷண் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,பிரதமரை நேரில் சந்தித்து பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கப்போவதாக நட்சத்திர வீரர் பஜ்ரங் பூனியா அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜ எம்பி பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது ஒரு சிறுமி உட்பட 7 வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். பல்வேறு போராட்டங்கள், வழக்கு காரணமாக அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. அதனால் பிரிஜ்பூஷண் பதவி விலகினார். தொடர்ந்து நடக்கும் தேர்தலில் அவரது ஆதரவாளர்கள் போட்டியிடக் கூடாது என்று போர்க்கொடி தூக்கிய மல்யுத்த வீராங்கனைகள், அது குறித்து ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷணின் விசுவாசியான சஞ்ஜெய் சிங் தலைராக தேர்வானார். மேலும் 4 துணைத் தலைவர்கள், 5 செயற்குழு உறுப்பினர்கள், பொருளாளர் என 15 பதவிகளில் பெரும்பான்மையான பதவிகளை பிரிஜ்பூஷண் ஆதரவாளர்களே கைப்பற்றினர். இந்த தேர்தல் முடிவால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சி அடைந்தனர். ‘பிரிஜ் பூஷணின் நெருங்கிய உதவியாளரும், வணிகப் பங்குதாரருமான சஞ்ஜெய் சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டுக்கு ஆளானவரே கூட்டமைப்பில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதனால் இனி இந்த அமைப்பின் சார்பில் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். அதனால் ஓய்வு பெறுகிறேன்’ என்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கண்ணீர் மல்க அறிவித்தார். அவரைத் தொடர்ந்து, பிரிஜ்பூஷண் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது பத்மஸ்ரீ விருதை பிரதமரை நேரில் சந்தித்து திருப்பிக் கொடுக்கப்போவதாக நட்சத்திர வீரர் பஜ்ரங் பூனியா நேற்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்னை குறித்து பிரதமருக்கு எழுதிய நீண்ட கடிதத்தையும் X வலைத்தள பக்கத்தில் பஜ்ரங் பூனியா பகிர்ந்துள்ளார்.

அந்த கடிதத்தில் பஜ்ரங் கூறியிருப்பதாவது: அன்பு பிரதமர் ஜி, நீங்கள் நலமாயிருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் பல்வேறு பணிகளில் மூழ்கியிருப்பீர்கள். எனினும், மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் பரிதாப நிலை குறித்து உங்களது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த ஆண்டு தொடக்கத்தில், பிரிஜ் பூஷணின் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராடியது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த போராட்டத்தில் நானும் பங்கேற்றேன். மூன்று மாதங்களுக்குப் பிறகும் பிரிஜ் பூஷணுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் மீண்டும் போராட்டத்தில் குதித்தோம். வேறு வழியில்லாததால் எங்கள் பதக்கங்களை கங்கையில் எறியப்போவதாக அறிவித்தோம். அப்போது அரசு தரப்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் நிறுத்தப்பட்டது.

ஜனவரியில் 19 புகார்கள் பதிவான நிலையில், ஏப்ரலில் அது 7 ஆகக் குறைந்தது. பிரிஜ் பூஷண் தனது செல்வாக்கை பயன்படுத்தி 12 வீராங்கனைகளின் புகார்களை வாபஸ் பெற வைத்துள்ளார். தேர்தலில் அவரது ஆதரவாளர்கள் வென்றுள்ளதால் கூட்டமைப்பு மீண்டும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். நானும் எனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை தங்களை நேரில் சந்தித்து திருப்பிக்கொடுக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு பஜ்ரங் கூறியுள்ளார். மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் சர்ச்சை மீண்டும் விஸ்ரூபம் எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் சர்ச்சை பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுப்பதாக ஒலிம்பியன் பஜ்ரங் பூனியா அறிவிப்பு: பிரதமருக்கு கடிதம் அனுப்பினார் appeared first on Dinakaran.

Tags : federation ,Bajrang Punia ,PM ,New Delhi ,BJP ,Brijbhushan ,
× RELATED மதுரையில் வணிகர்கள் சங்கங்களின்...